Thursday 2 February 2023

ஒரு நாள் ஒரு நூல் - 31.பெளத்தம் - சோ.ந.கந்தசாமி.31.01.2023

31.01.2023 ஒரு நாள் ; ஒரு நூல் - 31 பெளத்தம் -- சோ.ந.கந்தசாமி சென்னைப் பல்கலைக்கழகத்தின் டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் மெய்யுணர்வு மேல்நிலைக் கல்வி நிறுவனத்தின் வெளியீடாக முதற் பதிப்பாக 1977 இல் வெளிவந்துள்ளது இந்நூல். இந்நூல் xii * 302 = 324 பக்கங்கள் கொண்டது. தமிழ் பெளத்த நூல் வரலாற்றில் ஒப்புயர்வற்ற நூல்களில் இதுவும் ஒன்று. அறிஞர் அயோத்திதாசப் பண்டிதர், அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி ஆகிய இருவருக்குப் பின் தமிழ் இலக்கியங்களைப் பெளத்த மெய்யியல் கொண்டு ஆராய்ந்த மாபெரும் அறிஞர் முனைவர் சோ.ந.கந்தசாமி ஆவார். சோ.ந.கந்தசாமிக்குப் பின் தமிழ் இலக்கியங்களைப் பெளத்த மெய்யியல் கொண்டு ஆராய்ந்து வருவோர் சிலர் உளராயினும் சோ.ந.க.அளவுக்கு பெளத்தப் பாலி மெய்யியல் பனுவல்களை ஆழமாகக் கற்று ஆராய்ந்தவர் என இதுவரை வேறு யாரையும் சுட்டிச் சொல்லவியலாது. இந்நூலில் உள்ள பௌத்த பிடகக் குறிப்புகள் அளவுக்கு இந்நூலுக்கு முன்பும் எந்நூலிலும் இல்லை ; இன்றும் எந்நூலிலும் இல்லை. இனி நடக்குமா தெரியவில்லை. இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு மணிமேகலை காப்பிய ஆய்வு போதிய அளவு யாராலும் வளர்த்தெடுக்கப்படவில்லை . வேறு இலக்கிய ஆய்வுகளும் போதிய அளவுக்கு வளர்த்தெடுக்கப்படவில்லை. இந்நூல் அன்றைய , இன்றைய பௌத்த ஆய்வாளர்களால் ஆழமாக உள்வாங்கப்படவில்லை. அந்த அளவுக்கு ஆழமான, நுட்பமான, விரிவான, செறிவான ஆய்வு நூலாக இந்நூல் மிளிர்கிறது. காரணம் பாலிமொழி அறிவு போதிய அளவிற்கு யாருக்கும் இல்லை. பலரும் ஆங்கிலத்தில் இருந்துதான் எழுதுகிறார்கள். இப்படி எண்ணி எண்ணி வியக்க வைக்கும் நூலாக இந்நூல் விளங்குகிறது. எடுத்துக்காட்டாக ,பஞ்சசீலம் என்பவை மணிமேகலைக் காப்பியத்தில் எங்கெங்கு எவ்வாறு எந்தெந்தப் பின்னணியில் வலியுறுத்தப்பட்டுள்ளன என்பதை ஆராய்ந்து எழுதுகிற ஒரு பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டோமென்றால் அந்தப் பகுதியில் கொல்லாமை என்கிற ஒரு சீலத்திற்கு மட்டும் அந்தச் சீலத்தை வலியுறுத்தும் பௌத்தப்பிடகக் குறிப்புகள் பத்துக்கும்மேல் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த அளவிற்கு பௌத்தப் பாலி நூல்களை ஆழமாகக் கற்று அவற்றை மணிமேகலைக் காப்பியத்தில் பொருத்தி ஒப்புநோக்கி உறழ்ந்து ஆராய்ந்துள்ள நூலாக இந்த நூல் திகழ்கிறது. பௌத்தப்பிடகங்களோடு மட்டும் இல்லாமல் பௌத்தப் பிடக உரைகள், புத்த ஜாதகக் கதைகள், பௌத்தவியல் ஆய்வுகள் என்று ஏராளமான அறிவுக்களஞ்சியத் திரட்டை இந்த நூல் எங்கும் காண முடியும். இத்தகைய அரிய இந்நூலின் பொருளடக்கம் பின்வருமாறு : அணிந்துரை - vii முன்னுரை - ix 1. பௌத்த சமயவியல் - 1 2.பௌத்த பிரபஞ்சவியல் - 67 3.பௌத்த அறவியல் - 115 4.பௌத்த தருக்கவியல் - 183 5.பௌத்த தத்துவவியல் - 230 Bibliography - 290 பொருளகராதி - 295 15 11 1976 முதல் 1976 வரை 5 நாட்கள் சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் பௌத்தம் என்னும் தலைப்பில் ஆற்றிய ஆய்வுரைகளின் தொகுப்பே இந்நூலாகும். ஒரு சமயம் கட்டமைக்கப்படுவது அதன் தத்துவத்தில் இருந்தே ஆகும். எனவே, தத்துவம் தான் முதன்மையானது. ஆனாலும் இன்றைய வாழ்வியல் போக்கில் தத்துவம் பின்னே சென்று விடுகிறது ; சமயம் முன்னே நின்று விடுகிறது. இத்தகைய உலகியல் இயல்பு நோக்கில் இந்த ஐந்து நாள் உரைகளையும் பேராசிரியர் சோ.ந. கந்தசாமி அவர்கள் அமைத்துக் கொண்டுள்ளார்கள். எனவேதான், பௌத்த சமயவியலிருந்து பௌத்த பிரபஞ்சவியல் ,பௌத்த அறவியல், பௌத்த தருக்கவியல் என்று தொடர்ந்து பௌத்த தத்துவ இயலில் இந்த உரையை நிறைவு செய்திருக்கிறார். இத்தகைய அணுகுமுறையை மார்க்சிய நோக்கில் சொல்வதாக இருந்தால் மேல்கட்டுமானத்திலிருந்து அடிக்கட்டுமானத்தை விளக்கி ஆராய்ந்து உள்ளார் அறிஞர் சோ.ந. கந்தசாமி அவர்கள். பெளத்தத்தில் ஆய்வு செய்ய முன்வரும் ஒவ்வொருவரும் படித்தேயாகவேண்டிய நூல் இது. இந்நூலைப் படித்தால் இந்நூலிலிருந்து பல நூல்களை உருவாக்குவதற்கான தரவுகளையும் தெளிவுகளையும் அள்ளித்தரும் நூலாக இந்நூல் ஒளிர்கிறது ; மிளிர்கிறது. ( முன்பே இந்தப் பதிவர் இந்த நூலைப் படித்திருந்த நினைவுகளில் இருந்து இந்தப் பதிவை எழுதி உள்ளார். கையில் உடனடியாக நூல் இல்லாத நிலையில் இந்த நூலின் முகப்புப்பகுதியைப் புலனத்தின் வழியாக அனுப்பி வைத்த முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி என்றென்றும் உரித்தாகுக) இந்த நூலைச் சென்னைப் பல்கலைக்கழகம் மறுபதிப்பு செய்ய வேண்டியது வாழும் பெளத்தத் தேவையாகும். பதிப்பக முகவரி: டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் மெய்யுணர்வு மேல்நிலைக் கல்வி நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம். முதற் பதிப்பு: 1977 விலை : ரூபாய் 20/- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0FqZTXH1yf3EkGMg557uvG2Wzi2gUAbzzcTcXctM62pFTCv3gNn5htcHSnTxPMuFxl&id=100007862881487&mibextid=Nif5oz

Sunday 29 January 2023

ஒரு நாள் ; ஒரு நூல் - புத்தரின் புகழ்மிகு வாழ்க்கை - ஆர்தர் லில்லி.25.01.2023

25.01.2023 ஒரு நாள் ; ஒரு நூல் - 25 புத்தரின் புகழ்மிகு வாழ்க்கை -- ஆங்கிலத்தில் : ஆர்தர் லில்லி தமிழில் : சிவ.முருகேசன் சென்னை, சந்தியா பதிப்பகத்தின் முதல் பதிப்பாக 2009 இல் வெளிவந்துள்ளது இந்நூல். இந்நூல் 296 பக்கங்கள் கொண்டது. அறிஞர் ஆர்தர் லில்லியின் அழகிய ஆங்கில நடைநூலை அப்படியே அழகோடு தமிழாக்கித் தந்துள்ளார் அறிஞர் சிவ.முருகேசன். நூலை எடுத்துப் படிக்கத் தொடங்கினால் கீழே வைக்கவிடாதபடிக்கான நடையும் தேடலும் விளக்கங்களும் சான்றுகளும் ஈர்த்து விடுகின்றன. 24 தலைப்புகளின்கீழ் அமைந்துள்ள இந்நூலைப் படிக்கிறபோது உலகளாவிய சமய மெய்யியல் - பண்பாட்டியலுக்குள் வலம்வந்த நிறைவை அடையமுடிகிறது. அதேநேரத்தில், மனிதப் புனிதர் புத்தரைக் கடவுளாக்கிவிட்ட இந்தியச் சமயப் பின்னணியோடு கிறித்துவப் பண்பாட்டியல் விளக்கங்களின் இயைபுகளையும் அறிந்துகொள்ள முடியும். அறிஞர் ரைஸ் டேவிட்டின் ஆய்வை மறுதலிக்கும் ஆய்வு முடிவுகளைக் கொண்டதாக இந்நூல் அமைந்துள்ளது. ஆனாலும், அனான்மக் கோட்பாட்டைக் கொண்ட பெளத்தத்தின் ஆன்மாவைத் தேடும் அரிய படைப்பாக இந்நூல் மிளிர்கிறது. இந் நூலின் பொருளடக்கம் பின்வருமாறு : 1.புத்தரின் பிறப்பு - 17 2.குழந்தை புத்தர் - 30 3. புத்தரின் திருமணம் - 43 4.முன்னறிவிப்பான நான்கு அடையாளங்கள்- 55 5.மேன்மையான துறவு - 65 6.உயர்நிலை பிராமண சமயம் - 98 7.கீழ்நிலை பிராமண சமயம் - 107 8.புத்தரின் சீர்திருத்தம் - 118 9.புத்தரின் போதனை - 13வது 10.மன்னர் அசோகர் - 148 11.சூனியத்திற்கு அழைத்துச் செல்லும் ஊர்தி - 154 12.புத்தகோசரும் இலங்கையின் கடவுள் மறுப்பு கோட்பாடும் - 166 13.பௌத்த சங்கத்தின் முதல் கூட்டம்- 174 14.மூன்றாவது பவுத்த சங்கம் - 183 15.புத்தர் கோசரின் லலிதா விஸ்தர சுருக்கம் - 187 16.பிரம்ம ஜால சூத்திரம் - 192 17..மகாபரி நிர்வாண சூத்திரம் - 198 18.சடங்குகள் - 208 19.பௌத்தர்களின் மூன்றினத் தொகுப்பு அல்லது மும்பை - 213 20.அண்டப் படைப்புக் கோட்பாடு - 221 21.ஷமனிசம் - 225 22.அசோகரின் சாட்சியம் 245 23.வரலாற்றுப் புத்தர் - 251 24.புத்தரின் மறைவு - 292 நூலின் முகப்பில் என்னுரை,முன்னுரை ஆகியவை உள்ளன. இந்த முன்னுரையின் தொடக்கத்தில் இந்நூலாசிரியர் குறிப்பிடும் செய்திகள் இந்த நூலின் ஒட்டுமொத்தக் கருத்துக்களையும் பௌத்தத்தின் மெய்யியல் பின்புலத்தையும் அதன் சமூகப் பயன்பாட்டு நிலைகளையும் தெளிவாக எடுத்துரைக்கின்றன. இதோ அந்த முன்னுரையின் தொடக்கப் பகுதி : ". புத்தர் ஒரு சமய சீர்திருத்தவாதி ; கிறிஸ்து சகாப்தம் தொடங்குவதற்கு 470 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மறைந்தார். இப்புவியில் அவர் வாழ்ந்ததால் பின்வரும் விளைவுகள் ஏற்பட்டன. 1. உலகில் வேறு எங்கும் காணப்படாத யாராலும் வெல்ல முடியாத பூசாரிகளின் ககொடுங்கோன்மை புத்தரின் தாக்கத்தால் நொறுங்கியது.அவரது சீடர்கள் இந்தியத் திருநாட்டில் ஆயிரம் ஆண்டு காலம் முன்னணியில் திகழ்த்தனர். 2. சாதிப் பாகுபாடு தகர்த்தெறியப்பட்டுத் தலை கீழாகத் தவிர்க்கப்பட்டது. 3. பலதார மணம் முதன்முறையாக நீதிக்குப் புறம்பானது என அறிவிக்கப்பட்டது. அடிமை முறை கண்டிக்கப்பட்டது. 4. தட்டுமுட்டுச் சாமான்கள் என்றும் சமுதாயத்தில் பாரம் என்றும் கருதப்பட்ட பெண்கள் ஆண்களுக்குச் சமம் எனக் கருதப்பட்டு ஆன்மீக முன்னேற்றத்திற்கு முயற்சி செய்யவும் அனுமதிக்கப்பட்டனர். 5. ஒரு பூசாரியின் கத்தியால் ஆகட்டும் அல்லது ஒரு வெற்றியாளனின் வாளாலாகட்டும் ரத்தம் சிந்துதல் என்பது முற்றிலும் தடை செய்யப்பட்டது. 6. மனித சமுதாயத்தின் சமய வரலாற்றில் முதன்முறையாக சமயம் இருக்க வேண்டிய இடத்தில் தனி மனிதனின் ஆன்மீக விழிப்புணர்வு வைக்கப்பட்டது. பூசாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட உயிர்ப்பலிகளும் சம்பிரதாயமான சடங்குகளிலும் அல்லாமல் கடமை என்பது ஒழுக்கம், நீதி ஆகியவைகளின் வழியே நிறைவேற்றப்பட வேண்டும் என்பதைப் புத்தர் முதல் முறையாக அறிவித்தார். 7 .நிறுவனங்களின் மூலமாகவும் சமயத்தை மக்களிடையே பரவச் செய்யும் முறை முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. 8. இவற்றின் மூலம் இந்தியா, சீனா ,பாக்டீரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் மதமாற்றம் அறவழியிலேயே ஏற்படுத்தப்பட்டது. பௌத்தம் கட்டாயப்படுத்துவதை ஏற்பதில்லை. இன்னும் உலகில் மூன்றில் ஒரு பகுதி பௌத்தத்தின் அரவணைப்பில் உள்ளது எனக் கூற முடியும். இத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டது வரலாற்றில் ஓர் அதிசயம்தான் " (பக்.9 - 10 ). பொருளடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நான்காவது தலைப்பான ' முன்னறிவிப்பான நான்கு அடையாளங்கள் ' என்னும் தலைப்பில் வழக்கமாகக் காலங்காலமாக கற்பிக்கப்பட்டு வந்திருக்கிற பிணி, மூப்பு, சாக்காடு ஆகியவற்றை கண்டுதான் புத்தர் துறவுபூண்டார் என்கிற செய்தியே இடம்பெற்றுள்ளது. ஆனால், ஆறாவது, ஏழாவது தலைப்புகளாக அமைந்துள்ள உயர்நிலை பிராமண சமயம் , கீழ்நிலை பிராமண சமயம் என்கிற தலைப்புகளில் கீழ்நிலை பிராமண சமயம் என்பது புத்தரின் வருகைக்கு முன்பு இருந்த வைதீக பிராமண சமயம் என்றும் உயர்நிலை பிராமண சமயம் என்பது புத்தரின் வருகைக்குப் பிறகு உருவான பௌத்த சமயம் என்பதும் விளக்கப்பட்டுள்ளது. இதுவரையிலும் எந்த அறிஞராலும் விளக்கப்படாத புதிய விளக்கமாக இது அமைந்துள்ளது. இதுகுறித்து எட்டாவது தலைப்பான ' புத்தரின் சீர்திருத்தம் ' என்னும் தலைப்பிலான பகுதியை தொடங்குகிறபோதே இவ்வாறு நூலாசிரியர் எழுதிச் செல்கிறார் : " கீழ்நிலை பிராமண சமுதாயத்தை எதிர்த்து மேல்நிலை பிராமண சமயம் மேற்கொண்ட புரட்சியே பௌத்த இயக்கம். வரலாற்றின் பக்கங்களில் இதுவரை தோன்றாத முதன்மையான ஒருவரால் தலைமை ஏற்கப்பட்டு அந்தப் புரட்சி நடந்தது. தனிமனிதனின் ஆன்மீக உணர்வைத் தட்டி எழுப்புவது ஒன்றுதான் அதற்கு வழி என்று அவர் நன்கு உணர்ந்தார் குருதி சிந்த வைக்கும் உயிர்ப்பலி, சாதி, அதிக பொருட் செலவில் மேற்கொள்ளப்படும் தீர்த்த யாத்திரைகள் போன்றவை அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார் " ( ப.118 ). அதேபோல் பௌத்தத்தின் முதல் சங்கக் கூட்டம், மூன்றாவது சங்கக் கூட்டம் ஆகியவை எவ்வாறு நடந்தன என்பது குறித்த செய்திகள் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. ஆனால் , இதில் இரண்டாவது பௌத்த சங்கம் குறித்த செய்திகள் இடம் பெறாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. நூலின் 24 ஆவது தலைப்பான புத்தரின் மறைவு என்கிற தலைப்பில் புத்தரின் முதன்மைச் சீடரான ஆனந்தனிடம் புத்தர் நிப்பாணமடையும் முன்பாகக் கூறிய செய்திதான் இந்த உலகிற்கு புத்தர் விட்டுச் சென்ற நிறைவான செய்தி ஆகும் : " ஆனந்தா ! நீ நீயாகவே இரு; உனது ஒளியை நம்பு. உன்னிடமே நீ சரண் புகு . தர்மமே உனது ஒளிவிளக்காகவும் சரணாலயமாகவும் இருக்கட்டும் . வேறு எங்கும் சரணடைந்து விடாதே. இப்பொழுதிலிருந்து ஆனந்தா ! யாராக இருந்தாலும் அவன் அவனது ஒளியை நம்பட்டும் . அவனுக்குள் அவனே சரண் புகட்டும். வேறு எந்த தஞ்சத்தையும் நாட வேண்டாம் . இப்போதிலிருந்து அப்படி இருப்பவனே எனது உண்மையான சீடன் ; அவனே சரியான பாதையில் நடக்கிறான் " ( ப.293 ). இவ்வாறு எடுத்துக்காட்டத்தக்க பல்வேறு செய்திகளையும் தன்னகத்தில் கொண்டுள்ள அரிய நூலாக இந்த நூல் திகழ்கிறது. இந்த நூலில் இடம்பெற்றுள்ள மிக முக்கியமான செய்திகள், கருத்துக்கள், தத்துவ விளக்கங்கள், வரலாற்றுக் குறிப்புகள் ,ஸ்லோகங்கள் ஒவ்வொன்றிற்கும் அந்தந்தப் பக்கத்திலேயே அடிக்குறிப்புகளைக் கொடுத்திருக்கும் ஆய்வு நெறிமுறை சிறப்பான நெறிமுறையாகும். இதிலிருந்து ஒரு நூலை படைப்பவர்கள் எவ்வாறு சான்றுகளைத் தர வேண்டும் என்பதையும் இந்நூல் ஆசிரியர் உணர்த்துகிறார். இந்த வகையிலும் பௌத்த சமய வரலாற்றை, அதன் பின்னணிகளை மிகச் சிறப்பாக எடுத்துரைக்கும் நூலாக இந்நூல் திகழ்வதால் பௌத்தத்தைப் பற்றிய அறிதலுக்காக ,புரிதலுக்காகப் பயில விரும்புபவர்கள் எல்லோரும் அவசியம் பயில வேண்டிய நூலாக இந்த நூல் விளங்குகிறது. பதிப்பக முகவரி: சந்தியா பதிப்பகம், ப.எண் : 57, 53 ஆவது தெரு, 9 ஆவது அவென்யூ, அசோக் நகர், சென்னை - 63 முதற் பதிப்பு: 2009 விலை : ரூபாய் 175/- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02iwdunWyAkMDjkZ8haHifYckVH7rhEaEhBjPhEgXRXBaZTaAAv1r9DYAamUKbgoPFl&id=100007862881487&mibextid=Nif5oz

ஒரு நாள் ; ஒரு நூல் - 24. புத்தரின் தவமும் தத்துவங்களும் - ப.ராமஸ்வாமி.24.01.2023

24.01.2023 ஒரு நாள் ; ஒரு நூல் - 23 புத்தரின் தவமும் தத்துவங்களும் - ப.ராமஸ்வாமி சென்னை, வ.உ.சி.நூலகத்தின் முதல் பதிப்பாக 2006 ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது இந்நூல். இந்நூல் 656 பக்கங்கள் கொண்டது. பெளத்த அறிஞர் ப.ராமஸ்வாமி அவர்களின் புத்தரின் புனித வரலாறு, தம்மபதம், புத்த ஞாயிறு, புத்தரின் போதனைகள், பெளத்த தருமம் ஆகிய ஐந்து நூல்களின் தொகுப்பு நூலாக இந்நூல் திகழ்கிறது. பெளத்தம் குறித்த பரந்து விரிந்த செய்திகளை ஒரே நூலில் அறிந்துகொள்ளும் வாய்ப்பை இந்நூல் வழங்குகிறது. இந்நூலின் முகப்புப் பகுதியில் பதிப்புரை, பொருளடக்கம் ஏதும் இல்லை. ஐந்து நூல்களில் முதலில் அமைந்துள்ள நூல் ' புத்தரின் புனித வரலாறு ' என்பதாகும். இந்நூல் 20 இயல்களில் பக்கம் 5 முதல் 276 வரை ஆக மொத்தம் 271 பக்கங்களில் புத்தரின் வரலாற்றை உட்பொதிந்து வைத்துள்ளது.இந்நூலில் 5 பக்க முன்னுரை ஒன்றை இந்நூலாசிரியர் எழுதியுள்ளார். இந்நூல் ஒரு புதினத்தைப் படிப்பதுபோல் விறுவிறுவெனப் படிக்கிறவகையில் இனிய எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. எல்லா இயல்களிலும் பெளத்தப் பிடகங்களின் சுலோகங்கள், பெளத்தத் தமிழிலக்கியப் பாடல்கள் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ளன. ஐந்து நூல்களில் இரண்டாவது நூலாக அமைந்துள்ள நூல் ' தம்மபதம் ' என்பதாகும். இந்நூல் பக்கம் 277 முதல் 334 வரை ஆக மொத்தம் 57 பக்கங்களில் அமைந்துள்ளது. இந்நூல் 26 இயல்களில் 421 சுலோகங்கள் கொண்டது. இந்நூலாசிரியரின் மொழிபெயர்ப்பில் அமைந்துள்ள இந்நூலின் பல இயல்களும் நல்ல தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுத் தலைப்பிடப்பட்டுள்ளன. அவை முறையே வருமாறு: இயல் ஒன்று - இரட்டை செய்யுங்கள் இயல் இரண்டு - கருத்துடைமை இயல் மூன்று - சிந்தனை இயல் நான்கு - புஷ்பங்கள் இயல் ஐந்து - பேதை இயல் ஆறு - ஞானி இயல் ஏழு - முனிவர் இயல் எட்டு - ஆயிரம் இயல் ஒன்பது - தீயொடுக்கம் இயல் பத்து - தண்டனை இயல் பதினொன்று - முதுமை இயல் பன்னிரெண்டு - ஆன்மா இயல் பதின்மூன்று - உலகம் இயல் பதினான்கு - புத்தர் இயல் பதினைந்து - களிப்பு இயல் பதினாறு - இன்பம் இயல் பதினேழு - கோபம் இயல் பதினெட்டு - குற்றம் இயல் பத்தொன்பது - சான்றோர் இயல் இருபது - மார்க்கம் இயல் இருபத்தொன்று - பலவகை இயல் இருபத்திரெண்டு - நரகம் இயல் இருபத்து மூன்று - யானை இயல் இருபத்துநான்கு - அவா இயல் இருபத்தைந்து - பிக்கு இயல் இருபத்தாறு - பிராமணன் தம்மபதம் நூலின் நிறைவில் 3 அனுபந்தங்கள் (சொல் விளக்கங்கள் )கொடுக்கப்பட்டுள்ளன. ஐந்து நூல்களில் மூன்றாவது நூலாக இடம் பெற்று இருப்பது 'புத்த ஞாயிறு' என்னும் நூலாகும் ( பக்.335 - 443 ). ஆக மொத்தம் 108 பக்கங்களில் இந்நூல் அமைந்துள்ளது.இந்நூல் நான்கு இயல்களாக அமைந்துள்ளது. அவை முறையே, முதல் இயல் - புத்த ஞாயிறு , இரண்டாம் இயல் - வேதங்களும் வைதீக சமயங்களும் , மூன்றாம் இயல் - நான்கு தீர்க்கதரிசிகள் , நான்காம் இயல் - தேவகுமரரும் திருநபியும் என்பனவாகும். இந்நூலின் முதல் இயலான ' புத்த ஞாயிறு ' என்னும் தலைப்பில் புத்தர் இந்தியாவில் தோன்றிய காலத்தில் இந்தியாவிலிருந்த சமயங்கள், அவற்றிலிருந்து மாறுபட்டு புத்தர் தன் தத்துவத்தை முன்வைத்தமை, புத்தர் காலத்து இந்தியா, பௌத்த தருமம், பௌத்த சமயத்தைப் பற்றிய அறிஞர்களின் கருத்துக்கள், பௌத்தம் உருவாக்கிய சிற்பக் கலைகள், பௌத்தத்தால் ஏற்பட்ட கல்விப் பெருக்கம், இந்தியாவும் வெளிநாடுகளும் பௌத்த சமயத்தால் இணைந்தமை ஆகிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. இரண்டாம் இயலான 'வேதங்களும் வைதீக சமயங்களும்' என்னும் தலைப்பில் வேதங்களும் வைதீக சமயங்களும் முன்வைத்த கருத்து நிலைகள் , வேதங்களும் உபநிடதங்களும் முன்வைத்த கருத்துக்கள் குறிப்பாக பிரகதாரணிய உபநிடதம் , பகவத் கீதை, மூன்று ஆச்சாரியார்கள், சித்தாந்த சைவம் , பிறவாதங்கள் என்னும் பொருண்மைகளில் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. மூன்றாம் இயலான 'நான்கு தீர்க்கதரிசிகள்' என்னும் தலைப்பில் புத்தர் காலத்தில் தோன்றிய... புத்தர காலத்துக்கு முந்தைய காலத்தில் தோன்றிய நான்கு தீர்க்கதரிசிகள் பற்றிய செய்திகள், அவர்கள் முன்வைத்த தத்துவச் சிந்தனைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. முதலாவது தீர்க்கதரிசியாக கி.மு.1000இல்வாழ்க்கையில் வாழ்ந்த பாரசீக நாட்டைச் சார்ந்த ஜாத துஷ்டிரர், இரண்டாவது தீர்க்கதரிசியாக கி.மு. 573 இல் வாழ்ந்த கௌதம புத்தர், மூன்றாவது தீர்க்கதரிசி யாக கி.மு. 570 இல் வாழ்ந்த லாவோஸ், நான்காவது தீர்க்கதரிசியாக கி.மு. 551 இல் வாழ்ந்த கன்பூசியஸ் ஆகிய நான்கு தீர்க்கதரிசிகளின் கருத்துக்கள், மெய்யியல் சிந்தனைகள், அவர்கள் தோன்றிய காலத்துச் சமூகப் பின்னணி ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. இந்த நான்கு தீர்க்கதரிசிகளோடு மிகப் பிற்காலத்தில் தோன்றிய அதாவது கி.மு.1 இல் தோன்றிய இயேசு கிறிஸ்து, கி.பி. 632 இல் தோன்றிய முகமது நபி ஆகியோரின் மெய்யியல் சிந்தனைகளையும் வரலாற்றுப் பின்புலங்களையும் இந்த மூன்றாம் இயல் தெளிவாக விளக்கியுள்ளது. ஐந்து நூல்களில் நான்காவது நூலாக இடம் பெற்றுள்ள நூல் 'புத்தரின் போதனைகள்'என்னும் நூலாகும் ( பக்.445 - 527 ). ஆக மொத்தம் 82 பக்கங்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந்த நூலில் 43 தலைப்புகளில் புத்தரின் சிந்தனைகள் பகுத்தளிக்கப்பட்டுள்ளன. அவை முறையே வருமாறு : தற்பயிற்சி, சிந்தனை, ஞானம், தியானம், ஏழை , கருத்துடைமை, மடிமை, களியாட்டம், ஒழுக்கம் , அகிம்சை , அன்பு ,பொறுமை, கோபம், நல்வினைகள், தானம் , ஊழியம், நண்பர்கள்,மவுனம் , இன் சொல் , இன்னாச் சொல் , இன்பமும் துன்பமும், தீவினைகள்,ஐயமும் தெளிவும், ஆஸவங்கள், ரகசியம், இரண்டில் விளைதல், கொடுங்கோலம், புத்தர், பௌத்த தருமம்,பௌத்த சங்கம், பிக்குகள், உபாசகர்கள், சண்டாளர்கள், பெண்கள், நால்வகை வாய்மைகள், அஷ்டாங்க மார்க்கம் ,பன்னிரு நிதானங்கள், ஆன்மா, உடல், மரணம், கருமநிதி, நிர்வாணம் ஆகியவையாகும். இந்த 43 தலைப்புகளில் அடங்கியுள்ள புத்தரின் போதனைகளைப் பயிலும்போது புத்தரின் மெய்யியல் சிந்தனை முழுமையையும் அறிந்துகொண்ட உணர்வு கிடைக்கும் வகையில் சிந்தனைகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த புத்தரின் சிந்தனைகள் எந்தெந்த நூல்களில், எந்தெந்த இடங்களில்,எந்தெந்தப் பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன என்கிற குறிப்புகள் கொடுக்கப்படாமல் இருப்பது ஆய்வாளர்களுக்கு உதவுவதாக அமையாது. ஆனால் புது, பொது வாசிப்பாளர்களுக்குப் பரவாயில்லை என்று சொல்லலாம். ஆனாலும் முறையான அறிதலை இது கொடுக்காது. ஐந்து நூல்களில் ஐந்தாவது நூலாக இடம் பெற்று இருப்பது 'பௌத்த தருமம்' என்னும் நூலாகும் (பக்.529 - 656 ). ஆக மொத்தம் 127 பக்கங்கள் கொண்டது இந்நூல். இந்நூல் ஏழு இயல்களில் அமைந்துள்ளது. முதல் இயல் - நான்கு வாய்மைகள் - 531 இரண்டாம் இயல் - அஷ்டாங்க மார்க்கம் - 549 மூன்றாம் இயல் - அடிப்படைக் கொள்கைகள் - 574 நான்காம் இயல் - நிருவாணம் - 603 ஐந்தாம் இயல் - பௌத்தமும் சாதிப் பிரிவினையும் - 612 ஆறாம் இயல் - பௌத்த சங்கம் - 629 ஏழாம் இயல் - பௌத்தத் திருமுறைகள் - 637 ஏறத்தாழ ஒரே பொருண்மையின் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாக இந்நூல்(கள் )திகழ்கிறது(கின்றன). ஒரே ஆசிரியர் ஒவ்வொரு நூலிலும் புதிய புதிய தேடலையும் செய்திகளையும் விதைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ‌ முன்பே சொன்னபடி பெளத்தத்தைப் பற்றிய தொடக்க நிலை அறிமுகம் முதல் ஆய்வுநிலைவரையிலான பன்முக வாசிப்பாளர்களும் படிக்கத்தக்க நல்ல நூல் இது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. பதிப்பக முகவரி: வ.உ.சி.நூலகபம், ஜி- 1, லாயிட்ஸ் காலனி, இராயப்பேட்டை, சென்னை - 14 முதற் பதிப்பு : 2006 விலை : 350/- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid04cLagbLNbKEsPzBShot34xqYMfUN1dwVtAXYwYUZF5BtHgJbQecDGsvveK2Xtwenl&id=100007862881487&mibextid=Nif5oz

ஒரு நாள் ; ஒரு நூல் - 23. பெளத்தம் - ஒரு மார்க்சிய அறிமுகம் - தேவி பிரசாத் சட்டோபாத்யா+ 2, 23.01.2023

23.01.2023 ஒரு நூல் ; ஒரு நூல் - 23 பெளத்தம் - ஒரு மார்க்சிய அறிமுகம் - தேவி பிரசாத் சட்டோபாத்யா, இராம் விலாஸ் சர்மா, பென்கார்ட் - லெனின் பதிப்பாசிரியர்: வெ.கோவிந்தசாமி சென்னை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ( பி) லிட்.,டின் முதல் பதிப்பாக டிசம்பர் 2012 இல் வெளிவந்த நூல் இது. இந்நூல் 84 பக்கங்கள் கொண்டது. மார்க்சிய ஒளி என்ற ஆய்விதழில் 1970 களில் வெளிவந்த நான்கு கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல் ஆகும். மார்க்சிய நோக்கில் பெளத்த சமயத்தைப் புரிந்து கொள்வதற்கான நல்ல அடித்தளத்தை அமைத்துத் தருவனவாக இக் கட்டுரைகள் திகழ்கின்றன. நூலின் முன்பகுதியில் பதிப்புரை, அணிந்துரை - எஸ்.பாலச்சந்திரன், பதிப்பாசிரியர் குறிப்பு ஆகியவை உள்ளன. இவற்றைத் தொடர்ந்து உள்ளளடக்கம் இடம்பெற்றுள்ளது. உள்ளடக்கத்தில் இந்நூலில் இடம்பெற்றுள்ள நான்கு கட்டுரைகள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன: 1.ஆரம்ப பௌத்தத்தில் சில பிரச்சனைகள் - தேவி பிரசாத் சட்டோபாத்யா -தமிழில் : கா. சு. ரகுமணி - 11 2. புத்தர் போதனையின் சில தோற்றங்கள் - இராம் விலாஸ் சர்மா- தமிழில் : மு.அம்மையப்பன் - 45 3.நிலப் பிரபுத்துவம், வர்க்கம்,ஜாதி,தேசியம் - இராம் விலாஸ் சர்மா - தமிழில் : எஸ். நாராயணன் - 62 4.ஆரியப் பட்டரும் லோகாயதவாதிகளும் - பொன் கார்ட் லெவின் - தமிழில் : சாரதி - 76 இந்த நான்கு கட்டுரைகளில் முதல் இரண்டு கட்டுரைகள் புது தில்லி பீப்பிள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ் வெளியிட்டுள்ள Buddhism : A Marxist approach என்ற நூலில் இடம்பெற்றுள்ளவை ஆகும்.அடுத்த இரண்டு கட்டுரைகள் இந்த நூலிலே புதிதாக இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகள் ஆகும். இந்த நான்கு கட்டுரைகளில் முதல் இரண்டு கட்டுரைகளும் பௌத்தத்தை, அதன் மெய்யியலை, அதன் சமூகப் பின்புலத்தை, அதன் வரலாற்றுப் பின்புலத்தை, அதன் அரசியல் பின்புலத்தை அறிந்துகொள்ள துணை செய்யும் கட்டுரைகள் ஆகும். முதல் கட்டுரையான தேவி பிரசாத் சட்டோபாத்யாயா அவர்களின் கட்டுரை பௌத்தத்தை மார்க்சிய நோக்கில் எவ்வாறு புரிந்து கொள்வது? அவ்வாறு புரிந்து கொள்வதில் ஏற்படும் சிக்கல்கள் யாவை ? அச் சிக்கல்களை அவிழ்த்துக்கொள்ளும் நெறிமுறைகள் யாவை என்பது குறித்த ஆழமான சிந்தனைகளை, கேள்விகளை ஆராயும் கட்டுரையாக அமைந்துள்ளது. புத்தரைப் புரிந்துகொள்வதற்கு இரண்டு விதமான கண்ணோட்டங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஒன்று, அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய வீரர். இரண்டு, மேல் தட்டு வர்க்கமான பணக்காரக் கூட்டத்தோடு சென்று ஒட்டிக் கொண்டவர் என்று இருவேறு நோக்குகளில் ஆய்வுகள் நிகழ்ந்துவருகின்றன. இந்த இரண்டு நோக்க நிலைகளையும் மிக ஆழமாக , நுட்பமாக ஆய்வுசெய்து புதிய முடிவுகளை தருவதாக இந்த கட்டுரை அமைந்துள்ளது. மொத்தத்தில், மார்க்சிய நோக்கில் புத்தரின் வர்க்கச் சார்பு நிலை யாது என்பது குறித்த சிந்தனைகளை இந்தக் கட்டுரை விரிவாக ஆராய்ந்துள்ளது. பௌத்தத்தைச் சமூகவியல் பின்புலத்தில் வரலாற்று நோக்கில் ஆய்வுசெய்ய விரும்பும் எந்த ஒரு ஆய்வாளரும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரையாக இந்தக் கட்டுரை திகழ்றது. இரண்டாவது கட்டுரையான இராம் விலாஸ் சர்மா அவர்களின் கட்டுரையும் மார்க்சிய நோக்கில் புத்தரின் போதனைகளை ஆராய்ந்து உள்ளது. புத்தரின் தத்துவத்தை உருவாக்கிக் கொள்வதற்கு அக் காலகட்டத்தில் இருந்த மற்ற மெய்யியல்கள் எந்த அளவிற்கு உதவியுள்ளன என்பதை நுட்பமாக இந்தக் கட்டுரை ஆராய்ந்து கூறுகிறது. எனவே, இந்தக் கட்டுரையும் பௌத்தத்தைச் சமூகவியல் நோக்கில் ஆராய விரும்பும் எந்த ஒரு ஆய்வாளரும் படிக்க வேண்டிய கட்டுரையாக அமைந்துள்ளது. இந்தக் கட்டுரைத் தொகுப்பில் மூன்றாவது , நான்காவது கட்டுரைகளாக அமைந்துள்ள இரண்டு கட்டுரைகளும் நேரடியாக பௌத்தத்தை ஆய்வு செய்யும் கட்டுரைகள் அல்ல என்ற போதிலும் சமூகவியல் பின்புலத்தில் அன்றைய காலத்துச் சமூகத்தை எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்பது குறித்தும் அன்றைய காலத்துத் தத்துவ பின்புலங்கள் குறித்தும் அறிந்துகொள்வதற்கும் புரிந்துகொள்வதற்கும் தெளிந்துகொள்வதற்கும் பயன்படும் கட்டுரைகளாக அமைந்துள்ளன. இந்த இரண்டு கட்டுரைகளையும் படிப்பதன்மூலம் பௌத்தத்தை மட்டுமல்ல மானுட சமூக வரலாற்றுப் பின்புலத்தில் கருத்தியல்களை ஆராய்வதற்கு வழிகாட்டும் கட்டுரைகளாக அமைந்துள்ளன. இந்த அடிப்படைகளில் இந்த கட்டுரைத் தொகுப்பு மிகுந்த அறிவுப்பயன் அளிக்கும் கட்டுரைத் தொகுப்பாக அமைந்துள்ளது. பொதுவாக, தமிழில் இதுவரை நடந்துள்ள பௌத்த ஆய்வுகள் பெரும்பாலும் விளக்க ஆய்வுகளாகவும் பகுப்பாய்வுகளாகவுமே நடைபெற்று வருகின்றன. அவை பொருண்மை அடிப்படையில் தொகுக்கப்படும் பட்டியல் கட்டுரைகளாகவே பெரும்பாலும் அமைந்துவருகின்றன.இந்த ஆய்வுகள் சமூகவியல் பின்புலத்தில், மெய்யியல் பின்புலத்தில் திறக்கப்பட வேண்டியுள்ளன. அத்தகைய ஆய்வுகளை வளர்த்தெடுக்கும் போது புத்தம் புதிய ஆய்வு முடிவுகளை நாம் கண்டறிய முடியும். எனவே , பௌத்தம் குறித்த நுண்ணாய்வுகளுக்கு இந்தக் கட்டுரைத் தொகுப்பு ஒரு நல்ல வழிகாட்டும் தொகுப்பாக அமைந்துள்ளது. இத்தகைய நோக்கில் அதாவது மார்க்சிய நோக்கில் ஆய்வுசெய்கிறபோது வரலாற்று நோக்கில் ஒவ்வொன்றையும் தெளிவுபடுத்திக் கொள்ளும் வாய்ப்பு அமையும் என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்ய வேண்யுள்ளது. எனவே, இந்த நூலைத் தொகுத்துப் பதிப்பித்த பதிப்பாசிரியர் வெ.கோவிந்தசாமி அவர்களும் கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளர்களும் இந்தக் கட்டுரைத் தொகுப்பை வெளியிட்ட நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனமும் அதன் மேலாண் இயக்குநராகப் பணியாற்றும் தோழர் சண்முகம் சரவணன் அவர்களும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள் ஆவர். பதிப்பக முகவரி: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ( பி) லிட், 41- பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 98 முதல் பதிப்பு: டிசம்பர் 2012 விலை : ரூபாய் 65/- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02UGyFbbVodyWyCCQhG5zG8wAafETxcmCvkCLRStzP347FWiegkjENVX2e8CPcn9ul&id=100007862881487&mibextid=Nif5oz

Friday 27 January 2023

ஒரு நாள்; ஒரு நூல் - 21. பெளத்தத் தத்துவ இயல் - ராகுல சாங்கிருத்யாயன்.21.01.20231

21.01.2023 ஒரு நாள் ; ஒரு நூல் - 21 பெளத்தத் தத்துவ இயல் - ராகுல் சாங்கிருத்யாயன்.... தமிழில் : ஏ.ஜி.எத்திராஜூலு, ஆர்.பார்த்தசாரதி ( ஆர்.பி.எஸ்.) சென்னை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ( பி ) லிட்., வெளியீடாக இரண்டாம் அச்சாக ஜனவரி 2003 இல் வெளிவந்த நூல் இது. இந்நூல் 8 + 240 = 248 பக்கங்களைக் கொண்டுள்ளது. (இந்நூல் இதே பதிப்பகத்தின் வாயிலாக முதல் பதிப்பாக ஆகஸ்ட் 1985 இல் வெளிவந்துள்ளது.) இந்தியத் தத்துவங்களிலும் உலகளாவிய த்த்துவங்களிலும் சமூகவியலிலும் மானுட வரலாற்றியலிலும் ஆழ்ந்தகன்ற... நுண்மாண்நுழைபுலம் மிக்க... தெளிவான பேரறிஞர் ராகுல்ஜி என்பதை அறிந்தார் யாவரும் அறிவர். அறியாதார் யாராயினும் ராகுல்ஜியின் நூல்களைப் படிக்கத் தொடங்கிவிட்டால் இதையே உணர்வர். மேற்கண்ட துறைகளில் அறிவும் செறிவும் தெளிவும் பொலிவும் பெற விரும்புவோர் யாராயினும் படிக்க வேண்டிய இன்றியமையாத படைப்புகள் இவருடைய படைப்புகள் ஆகும். இத்தகைய பெருந்தகையின் சீரார்ந்த நூல்களுள் ஒன்றே இந்நூலுமாகும். பௌத்த ஆய்வுகளில் ஈடுபடும் எவர் ஒருவரும் இந்நூலை பயிலாமல் நூலின் கருத்துக்களை உள்வாங்காமல் இந்நூலின் அணுகுமுறையை பின்பற்றாமல் ஆய்வில் ஈடுபடுவார ஈடுபடுவார்கள் என்றால் அந்த ஆய்வு குறை உடைய ஆய்வாக பாரு இருக்கும் அந்த அளவிற்கு ஆய்வு நோக்கு ஆய்வு அணுகுமுறை ஆய்வு நெறிமுறைகள் ஆகியவற்றை மார்க்சியை இயங்கியல் அடிப்படையில் முன் வைக்கும் அரிய நூல் என் நூலாகும். இந்நூலின் பொருளடக்கம் பின்வருமாறு அமைந்துள்ளது: அத்தியாயம் ஒன்று 1.கௌதம புத்தரின் அடிப்படை தத்துவங்கள் - 1 1. கடவுளை ஒப்புக்கொள்ளாமல் இருப்பது - 2 2.ஆன்மாவை நிரந்தரமானதாக ஒப்புக் கொள்ளாமல் இருப்பது - 6 3.எந்தவொரு நூலையும் கடவுள் அருளியதாக ஒப்புக்கொள்ளாமல் இருப்பது - 15 4. வாழ்க்கை பிரபாகத்தை இந்த உடலில் முன்னும் பின்னும் என்று நம்புவது - 19 அத்தியாயம் இரண்டு கௌதம புத்தர் - 24 1.வாழ்க்கை - 24 2. பொதுவான கருத்துக்கள் - 27 3. நான்கு ஆரிய சத்தியங்கள் - 28 4.தத்துவ கருத்துக்கள் - 38 5.புத்தரின் தத்துவமும் அக்காலத்திய சமுதாய அமைப்பும் - 54 அத்தியாயம் மூன்று நாகசேனர் - 64 1.சமூக நிலைமை - 64 2.கிரேக்க இந்திய தத்துவங்களின் சங்கமம் - 67 3..நாகசேனரின் வாழ்க்கை - 68 4..தத்துவ கருத்துக்கள் - 70 அத்தியாயம் நான்கு பவுத்த மதப் பிரிவுகள் - 80 1. பவுத்த மதச் சம்பிரதாயங்கள் - 80 2.பவுத்த தத்துவப் பிரிவுகள் - 82 3.நாகார்ஜுனரின் சூனியவாதம் - 84 4.யோகாசாரமும் மற்ற பவுத்த தத்துவங்களும் - 88 அத்தியாயம் ஐந்து 1.பவுத்த தத்துவத்தின் உயர்மட்ட வளர்ச்சி - 91 1.அசங்கர் - 91 1..வாழ்க்கை - 92 2.அசங்கரின் நூல்கள் - 93 3.தத்துவ சிந்தனை - 93 2. திக் நகர் - 98 3. தர்மகீர்த்தி - 99 1.வாழ்க்கை - 99 2 .நூல்கள் - 101 3. தத்துவ சிந்தனை - 101 4.சமணர்களின் அனேகாந்த வாதத்திற்கு கண்டனம் - 133 அனுபந்தம் 1 1.புத்தரின் முற்காலத் தத்துவ மேதைகள் - 135 2.புத்தரின் முற்காலத் தத்துவ மேதைகள் - 137 3.புத்தர் காலத்துத் தத்துவ ஆசிரியர்களும் பிற்காலத் தத்துவ ஞானிகளும் - 138 துணை நூல்கள் - 151 அனுபந்தம் - 2 வஜ்ராயணத்தின் தோற்றமும் எண்பத்து நான்கு சித்தர்கணமும் - 152 அத்தியாயம் ஒன்று ,கௌதம புத்தரின் அடிப்படை தத்துவங்கள் என்னும் தலைப்பில் பின்வருமாறு தொடங்குகிறது : " புத்தருடைய மூன்று எதிர்ப்பு தத்துவங்களையும் ஒரு அங்கீகாரத் தத்துவத்தையும் தத்துவத்தையும் மொத்தம் கீழ்க் காணும் நான்கு தத்துவங்களையும் அறிந்துகொண்டால் அவருடைய உபதேசங்களைப் புரிந்து கொள்ள உதவிகரமாக இருக்கும். 1. கடவுளை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது. கடவுள் என்பதை ஏற்றுக் கொண்டால் 'மனிதன் தனக்குத்தானே எஜமானன்' என்னும் சித்தாந்தத்தை எதிர்ப்பதாகிவிடும் 2.ஆன்மாவை நிரந்தரமானது என்று ஒப்புக் கொள்ளாமல் இருப்பது. ஆன்மாவைச் சாஸ்வதமானதாக ஒப்புக்கொண்டால் பிறகு அதன் புனிதத்திற்கும் முக்திக்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விடும். 3.எந்த ஒரு நூலையும் கடவுள் அருளியதாக ஒப்புக்கொள்ளாமல் இருப்பது. அப்படி ஒப்புக்கொண்டால் அறிவையும் அனுபவத்தையும் எதற்குமே ஆதாரமாகக் கொள்ள முடியாமல் போய்விடும். 4. வாழ்வின் பிரவாகத்தைத் தற்போதைய உடலுக்கு மட்டுமே சொந்தமாகக் கருதாமல் இருப்பது. அப்படிக் கருதினால் வாழ்வும் அதன் பல்வேறு அம்சங்களும் காரண காரிய விதிகளின்படி தோன்றியவையாக இல்லாமல் வெறும் திடீர் நிகழ்ச்சிகளாகிவிடும் " ( ப.1 ) இந்த நான்கு தத்துவங்களையும் தெளிவாகப் புரிந்துகொண்டால் புத்தரின் தத்துவங்கள் அத்தனையையும் முழுமையாகவும் தெளிவாகவும் புரிந்து கொள்ள முடியும் . இதை இந் நூலின் முதல் பக்கத்திலேயே அழகாகத் தொகுத்து வழங்கி உள்ளார் ராகுல்ஜி. புத்தரின் தத்துவங்கள் எங்கும் இந்த நான்கு தத்துவங்களும் அடங்கி இருப்பதைப் பயில்கிற ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள முடியும். இந்த நூலிலும் அத்தகைய போக்கு ஊடாடி உயிரோடி இழையோடி நிற்கிறது. கௌதம புத்தர் என்னும் தலைப்பில் அமைந்துள்ள அத்தியாயம் இரண்டில், சித்தாந்த கௌதமராய்ப் பிறந்த புத்தர் புத்தராய் மலர்ந்து ஞானம் பரப்பிய அவரின் வரலாறு முழுவதும் அவரின் மெய்யியல் பின்னணிகளோடு விளக்கப்பட்டுள்ளது. "அழிவுடையவை, துன்பம், ஆன்மா இல்லை " இத்தொடரிலேயே புத்தரின் தத்துவம் எல்லாம் அடங்கி விடுகிறது" ( ப.38 ) என்று ஓர் இடத்தில் எழுதிச் செல்கிறார். உண்மை இதுதான். இவற்றை விவரித்து விளக்கி நுண்பொருள் கண்டு அறிந்து கொள்கிறபோது இந்தத் தொடரின் ஆழமும் நுட்பமும் நமக்கு நன்றாகப் புலப்படும். நாகசேனர் என்னும் தலைப்பிலான அத்தியாயம் மூன்றில், நாகசேனர் பௌத்த தத்துவத்தை எவ்வெவ்வாறு விளக்கியுள்ளார் என்கிற செய்திகள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. பவுத்த மதப் பிரிவுகள் என்னும் தலைப்பிலான அத்தியாயம் நான்கில், பவுத்த மதம் தொடக்கத்தில் மகா சாங்கிக், ஸ்தவிரவாதம் என்ற இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து அதற்குப் பின்னர் 125 ஆண்டுகளில் ஸ்தவிரவாதம் 12 பிரிவுகளாகவும் மகாசாங்கிக் ஆறு பிரிவுகளாகவும் ஆகிவிட்டதையும் அப்பிரிவுகள் முன்வைக்கும் தத்துவப் பிரிவுகளையும் தத்துவக் கருத்துக்களையும் விளக்குகிறது. குறிப்பாக , பௌத்தர்களின் நான்கு தத்துவ பிரிவுகளான சர்வாஸ்திவாதம், சௌந்திராந்திகம், யோகாசாரம், மாத்யாமிக் ஆகியவற்றை விரிவாக இந்த இயல் விளக்குகிறது. மேலும் இவ்வியலில் சூனியவாதம் என்னும் தத்துவ வழியை முன்வைத்த நாகார்ஜுனர் , விஞ்ஞானவாதம் என்னும் யோகாசார மரபைச் சார்ந்த அசங்கர், வசுபந்து,தர்ம கீர்த்தி ஆகியோரின் கருத்துக்கள், வெளிப்பொருள் வாதம் என்னும் சவுந்திராதிகக் கருத்துக்கள், வெளி- உள்பொருள் வாதம் என்னும் சர்வாஸ்திவாதம் முன்வைத்த சங்க பத்திரர், வசுபந்து ஆகியோரின் கருத்துக்கள் ஆராயப்பட்டுள்ளன. பவுத்தத் தத்துவத்தின் உயர்மட்ட வளர்ச்சி என்னும் தலைப்பிலான அத்தியாயம் ஐந்தில், அசங்கர் (கி.பி.350), திக்நாகர் (கி.பி.425 ), தர்ம கீர்த்தி ( கி.பி. 600 ) ஆகியோரின் மெய்யியல் விளக்கங்கள், தருக்கவியல் நுட்பங்கள் ஆகியவை அழகுற விளக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஐந்து இயல்களில் அமைந்துள்ள இந்த நூலில் அனுபந்தங்கள் என்னும் பின்னணிப்புகளாக இரண்டு பெரும் கட்டுரைகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஐந்து இயல்களையும் அவற்றில் உள்ளடங்கும் பௌத்த மெய்யியல் சிந்தனைகளையும் பௌத்த மெய்யியல் உருவாக்கப் பின்புலங்களையும் புத்தர் காலத்திற்கு முன்பும் புத்தர் காலத்திலும் புத்தர் காலத்திற்குப் பின்பும் அதாவது புத்தரின் முற்காலம், புத்தரின் தற்காலம், புத்தரின் பிற்காலம் ஆகிய முப்பெரும் காலகட்டங்களிலும் இந்தியாவில் விளைந்திருந்த பல்வேறு மெய்யியல் பின்புலங்கள் எவ்வாறு பௌத்தத்தின் மெய்யியல் மறுமலர்ச்சிக்குக் காரணங்களாக அமைந்திருந்தன என்பதை இந்த இரண்டு பின்னிணைப்புக் கட்டுரைகளும் விளக்குகின்றன. ஐந்து இயல்கள் கொண்ட இந்த நூல் 134 பக்கங்களில் அமைந்திருக்க அதே அளவிலான நூலின் செம்பாதிப்பகுதியை இந்த இரண்டு பின்னிணைப்புகளும் கொண்டிருக்கின்றன. இதிலிருந்து இரண்டு பின்னிணைப்புகளின் இன்றியமையாமை குறித்து நாம் அறிய முடியும். அத்தகைய பின்னிணைப்புகள் எனப்படும் அனுபந்தங்கள் இரண்டும் பின்வருமாறு : புத்தரின் முற்காலத் தத்துவ மேதைகள் என்னும் தலைப்பிலான அனுபந்தம் ஒன்றில் புத்தரின் முற்காலத் தத்துவ மேதைகளான சார்வாகர், அஜித கேச கம்பளர் - லோகாயதவாதி (கி.மு.523 ), மக்கலி கோஷால் - செயலாற்றாதவாதி (கி.மு. 523 ), பூரண காசியபர் - செயல் இல்லாத தத்துவவாதி ( கி.மு.523 ), பிரக்ரூத் கர்யாயனர் - நிரந்தரப் பொருள் வாதி (கி.மு.523 ), சஞ்சய பே லட்ட புத்தர் (கி.மு.523 ) வர்த்தமான மகாவீரர் - எல்லாமும் அறிந்த வாதம் ( கி.மு. 569 - 485 ) ஆகியோரின் மெய்யியல் சிந்தனைகள், அவை இந்திய மெய்யியல் சிந்தனை மரபில் பெறும் இடம், அவை பௌத்த மெய்யியல் சிந்தனைகளுக்கு உதவிய கூறுகள் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. வஜ்ராயணத்தின் தோற்றமும் எண்பத்து நான்கு சித்தர்கள் என்னும் தலைப்பிலான அனுபந்தம் இரண்டில் , பௌத்த சமயத்தின் முக்கியப் பிரிவாக பிற்காலத்தில் உருவான வஜ்ராயணம் என்ற பௌத்தத் தத்துவப் பிரிவு குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்த வஜ்ராயண மரபில் தோன்றிய 84 சித்தர்கள் குறித்த செய்திகள் அழகாக விளக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தொடர்ந்து கீழைநாடுகளில் பௌத்த மறுமலர்ச்சி என்கிற தலைப்பில் பௌத்தம் பல்வேறு நாடுகளில் பரவிய செய்திகள் , பௌத்த மதத்தைப் பரப்பிய பௌத்த அறிஞர்கள், பிக்குகள் ஆகியவற்றைப் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் எழுதி உள்ளார். மங்கோலியா, திபெத்து, சீனா, கொரியா , இந்தோனேசியா, ஜப்பான், தாய்லாந்து , சிலோன் ஆகிய நாடுகளில் பௌத்தம் பரவிய செய்திகள் விளக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரையின் நிறைவுப் பகுதியில் இந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்கிற தலைப்பில் பௌத்தம் வளர்ந்த வரலாறும் பௌத்தம் விழுந்த பின்னணியும் விளக்கப்பட்டுள்ளன. இந்நூலின் தொடக்கத்திலேயே சொன்னது போல மூன்று கருத்துக்களில் அல்லது தத்துவங்களில் பௌத்தம் அடங்கி உள்ளது என்ற செய்தியை நூலின் இறுதியிலும் ஆழமாக இந்நூல் ஆசிரியர் பதிவு செய்துள்ளார்: " மூன்று சொற்களில் பௌத்த மெய்யியல்களைச் சுருக்கிக் கூறிவிடலாம். அனைத்தும் துக்கம், அனாகமம் அதாவது நிலையாமை , நிறைவின்மை, ஆன்மா இன்மை ஆகிய மூன்றும் பௌத்தரது போதனையின் அடித்தளம் " என்று விளக்கிவிட்டு ஓரிடத்தில் பௌத்தம் காலங்காலமாக மாறாமல் பின்பற்றும் ஒரு தத்துவமாக அனாத்மக் கோட்பாடு உள்ளது என்பதைப் பின்வருமாறு விளக்குகிறார் : " புத்தர் மறைவுக்குப் பின் 2000 ஆண்டுகளாக பௌத்தர்களிடையில் பல கருத்து வேறுபாடுகள் தோன்றின. முதலில் 18 பிரிவுகள் இருந்தன. பின் மகாயானம் வந்தது.அதன் பின் வஜ்ராயணம் வந்தது .ஒவ்வொருவரிடையும் பல கருத்து மோதல்கள் ஏற்பட்டன. ஆனால் அனைவருக்கும் ஒரே கருத்தில் வேற்றுமை இருந்ததில்லை .அதுதான் அனாத்மா " ( ப.229 ) இந்நூலின் இன்றியமையாமை பற்றிச் சுருக்கச் சொன்னால் , இந்நூலின்றி வரும் பெளத்த ஆய்வு முழுமைபெற்றதாகாது எனலாம். எனவே, பெளத்தத்தை அறிந்துகொள்ள, புரிந்துகொள்ள, ஆய்ந்துசொல்ல, பின்பற்ற விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் பயிலவேண்டிய நூலாக இந்நூல் திகழ்கிறது. பதிப்பக முகவரி: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41 - பி, சிட்கோ இண்டஸ்ட்ரி ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 600 098 இரண்டாம் அச்சு: ஜனவரி 2003 விலை : ரூ.75/- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid027RAnyYkBMm9GhwBjFTqiVMXk3waEu91vvqTUshHFjM6wozuVHD7Hf47iyhYhQYHHl&id=100007862881487&mibextid=Nif5oz

Wednesday 18 January 2023

ஒரு நாள்; ஒரு நூல் - 12. பெளத்தக் கலை வரலாறு - டாக்டர் ஜி.சேதுராமன், 12.01.2023

12.01.2023 ஒரு நாள் ; ஒரு நூல் - 12 பௌத்தக் கலை வரலாறு -- டாக்டர் ஜி சேதுராமன் இந்நூல் ஜெ.ஜெ. பப்ளிகேஷன்ஸ், மதுரை மூலமாக ஏப்ரல் 2006 இல் முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது. இந்நூல் 246+ 34 = 280 பக்கங்களைக் கொண்டுள்ளது. பௌத்தக் கலை வரலாறு என்னும் பொருண்மையில் தமிழில் முதன் முதலில் வெளிவந்த நூல் இந்நூல் என்பது இந்நூலுக்கு உரிய பெருமையும் சிறப்பும் ஆகும். இந்நூலைப் படைத்துள்ள டாக்டர் ஜி.சேதுராமன் அவர்கள் கடின உழைப்பு, சிறந்த தேடல், சிறந்த ஆய்வு அணுகுமுறை,சிறந்த ஆய்வு நெறிமுறை ஆகியவற்றோடு இந்நூலைப் படைத்தளித்துள்ளார். பௌத்தக் கலை வரலாறு குறித்து "தமிழில் ஒரு நூல் கூட இல்லை என்று பல ஆண்டுகளுக்கு முன்னர் என் மனதில் ஓர் ஆதங்கம் தோன்றியது.அதன் விளைவுதான் பௌத்தக் கலை வரலாறு என்னும் இச்சிறிய படைப்பு " என்று நூன்முகம் என்னும் பகுதியில் தன்னடக்கத்தோடு தெரிவித்துள்ளார். இந்நூலைப் பயில்கிற எவர் ஒருவரும் வியக்காமல் இருக்க முடியாது. இரண்டு விதமான வியப்புகள் இந்நூலைப் படிக்கிறபோது தோன்றுகிறது. பௌத்தக் கலை மரபு இத்தகைய பெருமையும் சிறப்பும் சீர்மையும் ஓர்மையும் அழகியலும் வாய்ந்ததா என்கிற வியப்பு, ஒன்று.இந்நூலை எவ்வளவு தரவுகளோடு,எவ்வளவு செறிவோடு, எவ்வளவு நுட்பமான விளக்கங்களோடு பேராசிரியர் படைத்தளித்துள்ளார் என்கிற வியப்பு, இன்னொன்று. இவ்வாறான வியப்பைத் தரக்கூடிய இந்நூலின் பொருளடக்க முறைமை பின்வருமாறு அமைக்கப்பட்டுள்ளது: முன்னுரை 1.கட்டடக்கலை - 1 2. சிற்பக்கலை - 69 3.ஓவியக்கலை - 156 4.தமிழகத்தில் பௌத்தக் கலை - 186 5.ஆசிய நாடுகளில் பௌத்தக் கலை - 206 6.கலைச்சொல் விளக்கம் - 240 7.நோக்கு நூற்பட்டியல் - 244 நிழற்படங்கள் - 247 முன்னுரை என்னும் பகுதி இந்நூலைப் படிப்பதற்கான திறவுகோல்களைத் தருவதாக அமைந்துள்ளது. கட்டடக்கலை என்னும் முதல் இயல் மூன்று முக்கியப் பொருண்மைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. பௌத்த கட்டடக் கலைச் சின்னங்கள் 3 வகைகளாக அமைந்துள்ளன. ஒன்று, ஸ்தூபம். இரண்டு, சைத்தியங்கள், மூன்றுவிகாரங்கள். இந்த மூன்று கட்டடக்கலை மரபுகளும் பௌத்தக் கட்டிடக்கலை மரபுகளில் எவ்வெவ்வாறு இடம் பெற்றுள்ளன,0இத்தகைய ஸ்தூபங்கள், சைதன்யங்கள், விகாரைகள் இந்தியா முழுவதும் எங்கெங்கெல்லாம் அமைக்கப்பட்டுள்ளன என்கிற செய்திகளை விரிவாகவும் செரிவாகவும் விளக்கி எழுதியுள்ளார். இரண்டாவது இயலான சிற்பக்கலை என்னும் இயலில் பௌத்தச் சிற்பக் கலைகள் எந்தெந்த ஆட்சி காலங்களில் உருவாக்கப்பட்டு இன்றைக்கு கிடைக்கின்றன என்ற செய்திகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. அவை முறையே,0மௌரியர் காலச் சிற்பங்கள், சுங்கர்,சாதவாகனர் காலச் சிற்பங்கள், குஷானர் காலச் சிற்பங்கள், குப்தர் காலச் சிற்பங்கள்,பிந்திய சாதவாகனர் காலச் சிற்பங்கள் என்றவாறு வரலாற்றுக் கால முறைமை அடிப்படையில் தொகுத்து எழுதியுள்ளார். மூன்றாவது இயலாத ஓவியக்கலை என்னும் தலைப்பில் ஓவியக்கலை இந்தியா முழுவதும் எங்கெங்கே உருவாக்கப்பட்டுள்ளன,0 அவற்றில் இடம்பெறும் பௌத்தக் கலை நுட்பங்கள் யாவை, அவை உணர்த்தும் செய்திகள்,கருத்துக்கள் ஆகியவை அழகுற விளக்கப்பட்டுள்ளன. ஓவியக்கலையும் வரலாற்றுக் கால நிரல்படி ஆராயப்பட்டுள்ளது. சாதவாகனர் காலம், குஷானர் காலம்,குப்தர் காலம் , வாகாடகர் காலம், பாலர், சேனர் காலம் என்றவாறு விரிவாக எழுதப்பட்டுள்ளது. நான்காம் இயலாமான தமிழகத்தில் பௌத்த கலை என்னும் தலைப்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்றுள்ள பௌத்தக் கலை மரபுகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன .காஞ்சி, காவிரிப்பூம்பட்டினம்,0 தென்னார்க்காடுபகுதி, புதுக்கோட்டை ,திருச்சி, தஞ்சாவூர் ,திருவாரூர்,நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடம்பெற்றுள்ள பௌத்த விகாரைகள், சிற்பங்கள், சிலைகள், செப்புத் திறமைகள் ஆகியவை தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. ஐந்தாம் இயலான ஆசிய நாடுகளில் பௌத்த கலை என்னும் தலைப்பில் இலங்கை, நேபாளம், திபெத், பர்மா, ஜாவா, தாய்லாந்து, கம்போடியா ,சீனா, கொரியா உள்ளிட்ட 9 ஆசிய நாடுகளில் பரவி உள்ள பௌத்த கலை குறித்த செய்திகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயலிலும் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை ஆகிய முப்பரிமாண நிலை இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு இயலிலும் ஒவ்வொரு கலைகளிலும் உள்ள கால அடிப்படையிலான வேறுபாடுகள், புதுமைக்கூறுகள், அழகியல் நுட்பங்கள் என்று இன்ன பிற கலை நுட்பக் கூறுகள், அவற்றின் தனித்தன்மைகள், பொதுமைக் கூறுகள் என்ற அடிப்படையில் மிக நுட்பமாக ,ஆழமாக, அழுத்தமாக, விரிவாக,செறிவாக எழுதப்பட்டுள்ளன. ஆங்காங்கே ஒவ்வொன்றையும் விளக்குகையில் அவை அதாவது பௌத்தக் கலை நுட்பங்கள் எவ்வாறு சைவ,வைணவ, சமணக் கலை மரபுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை மிக அழகாக விளக்கியுள்ளார் ஆசிரியர். கலை நுட்பக் கூறுகளில் ஒளிரும் மெய்யியல் பின்புலங்கள் ஆங்காங்கே விளக்கப்பட்டுள்ளவை மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இந்நூலை இளம் ஆய்வாளர்கள் அவசியம் பயில வேண்டும். அவ்வாறு பயில்வார்களானால் இந்நூலில் இருந்து ஏராளமான ஆய்வுக் களங்களைக் கண்டறிய முடியும். அவர்களின் மேலாய்வுகளுக்கு இந்நூல் அரிய ஆய்வுக் கருவியாகப் பயன்படும் என்பது வெள்ளிடைமலை. மொத்தத்தில், இந்நூல் பெளத்த வரலாற்றுக் கலைக்களஞ்சியம் ஆகும். இந்நூலில் இடம்பெற்றுள்ள படங்கள் வண்ணப் படங்களாக இருந்தால் மிகவும் இரசனை தருவதாக இருக்கும். இந்நூலை ஏதேனும் ஒரு பதிப்பகம் மறுபதிப்பு செய்தால் நல்லது. இதுகுறித்து நூலாசிரியர் முயற்சி எடுக்கவேண்டும் என்று வேண்டுகிறேன். பதிப்பக முகவரி: J.J.Publications, 29, Karpaga Vinayagar Complex, K.Pudur, Madurai - 625 007 Ph . 0452-2565526 விலை.ரூ.124/-. https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0t3fPb7R9FcQuZzWz4JVKrAVNLK2TPNLCbPmqsJeeoSGep5Re5pdcJXXNHcMH9Yccl&id=100007862881487&mibextid=Nif5oz

ஒரு நாள் ; ஒரு நூல் - 11. புத்தர் வசனம் - ஆங்கிலத்தில் : எஸ்.தம்மிகா, தமிழில்: தி.சுகுணன், 11.01.2023

11.01.2023 ஒரு நாள்; ஒரு நூல் - 11 புத்தர் வசனம் ( புனித பெளத்த இலக்கியத்திலிருந்து தினசரி படிக்க வேண்டியவை ) -- ஆங்கிலத்தில் : எஸ்.தம்மிகா , தமிழில்: தி.சுகுணன் சென்னை, நாம் தமிழர் பதிப்பகத்தின் முதற் பதிப்பாக ஏப்ரல் 2007 இல் வெளிவந்த நூல் இது. இந்நூல் 216 பக்கங்களைக் கொண்டது. பெளத்தத்தின் மூன்று புகலிடங்கள் புத்தம், தம்மம், சங்கம் ஆகியன. இம் மூன்றும் வடிவமைத்துத் தந்துள்ள அறநெறிகளினடிப்படையில் வாழ்வியலைத் தகவமைத்துக் கொள்வதே பெளத்த வாழ்வியல் ஆகும். இத்தகைய வாழ்வியலில் விரும்பும் ஒருவர் ஆண்டின் 365 நாள்களில் ஒவ்வொரு நாளும் மனங்கொள்ளத்தக்க பெளத்த வாழ்வியல் கடைப்பிடி நெறிகளை - சிந்தனைகளைத் தொகுத்து வழங்கும் நூலாக இந்நூல் விளக்குகிறது. இந்த அடிப்படையில் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை ஒவ்வொரு நாளுக்கும் உரிய சிந்தனைகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. இச் சிந்தனைகளில் சில சிந்தனைகள் வெகு எளிய சிந்தனைகளால் அதாவது ஒரு சராசரி மனிதர்கூடத் தானே சிந்திக்கக்கூடியனவாக உள்ளன. இவையெல்லாம் புத்தரின் சிந்தனைகளா என்று தோன்றும்வண்ணம் சில உள்ளன. ஆனால் நூலின் பெரும்பான்மையான சிந்தனைகள் மனித மனங்களை ஒழுங்கமைக்கும் ஆற்றல் வாய்ந்தனவாக உள்ளன. இன்றைய சிந்தனைக்காக இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ள சிந்தனை இதோ : ஜனவரி 11 " இந்தக் கோட்பாடுகள் வழிநடத்திச் செல்லவில்லை ; தியாகம் செய்யச் சொல்லவில்லை ; அசைவற்ற நிலையை மாற்றவில்லை ; அமைதி- எழுச்சியைக் கொடுக்கவில்லை ; நிர்வாண நிலைக்கு அழைத்துச் செல்லவில்லை என்று நீங்கள் கூறினால் அவை அறம் இல்லை என்று நீங்கள் உறுதியாக நம்பலாம் .அவை போதனைகள் அல்ல .அவை ஆசிரியரின் வார்த்தைகளும் அல்ல . ஆனால் எந்தக் கோட்பாடுகள் , போதனைகள் வழிநடத்திச் செல்கின்றன; அமைதியை -தியாகத்தை - போதிக்கின்றன; இயங்க வைக்கின்றன; மன நிம்மதியைக் கொடுக்கின்றன; மேலான அறிவைக் கொடுக்கின்றன; எழுச்சி கொடுக்கின்றன ; நிர்வாண நிலைக்கு அழைத்துச் செல்கின்றன என்று நீங்கள் கூறுகிறீர்களோ அதையே உண்மையான அறம் என்று நீங்கள் உறுதியாக நம்பலாம் . அவையே ஒழுக்க நெறிகள் ;அவையே ஆசிரியரின் போதனைகள். " இவ்வாறான ஒவ்வொரு நாளுக்குரிய சிந்தனைகளும் நல்ல மனநிலையையும் நல்ல வாழ்நிலையையும் கொடுக்கவல்லன என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இந்நூலை ஆங்கிலத்தில் படைத்தளித்துள்ள எஸ்.தம்மிகா என்பவர் ஒரு பெளத்தப் பிக்கு ஆவார். எனவே, தான் பிக்கு ஆவதற்கு மனதைச் செம்மை செய்யப் பயன்பட்ட அறவியல் சிந்தனைகளைப் பிறரும் பயன்கொள்ளும் வண்ணம் அழகுறத் தொகுத்தளித்துள்ளார். இந்நூலைத் தமிழில் தி.சுகுணன் அவர்கள் தெளிவாக மொழிபெயர்த்துத் தந்துள்ளார். இந்நூலைத் தொகுத்தளிக்கும் வாழ்வியல் தகுதியுடையவராக இவர் விளங்குகிறார் ; எவ்வாறெனில், தான் படிக்கிறோம் ; பின்பற்றுகிறோம் ; மற்றவர்க்குக் கற்பிக்கிறோம் என்பதோடு தன் குடும்பத்தினரையும் பண்படுத்திப் பெளத்த நெறியில் ஆற்றுப்படுத்துபவராகத் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். தன் குழந்தைகள் நால்வரில் மூவருக்கு பெளத்தப் பெயர்களைச் சூட்டிக் கொள்கைநெறியில் ஆற்றுப்படுத்துபவராகத் திகழ்கிறார் இவர். ஆம். இவரின் பிள்ளைகளின் பெயர்கள் முறையே, சு.கெளதமன், சு.அண்ணாதுரை, சு.அசோகன், சு.சங்கமித்ரா என்பனவாகும். இந்நூலின் மூலநூலில் ஒவ்வொரு நாளுக்கும் கொடுக்கப்பட்டுள்ள சிந்தனைகளுக்குமான நூல் மேற்கோள் சான்றுக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளனவா என்று தெரியவில்லை. அவ்வாறு இருந்தால் இனிவரும் தமிழ்ப் பதிப்புகளில் அவற்றைக் கொடுப்பது நலமாகும். பதிப்பக முகவரி: நாம் தமிழர் பதிப்பகம், 6/16, தோப்பு வேங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை - 600 005 பேச : 044- 2944 3791, 94440 82232 முதல் பதிப்பு : ஏப்ரல் 2007 விலை : ரூ.80/-